தஞ்சை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு
தஞ்சை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர் தேர்தலுக்கு தாமதமாக வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர் தேர்தலுக்கு தாமதமாக வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று காலை மண்டலக்குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கஜலட்சுமி நியமனக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் 17 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் ஆணையரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவு பெற்று நேற்று காலை கூட்ட அரங்குக்கு அண்ணா.பிரகாஷ் உள்ளிட்ட 25 கவுன்சிலர்கள் வந்தனர். அவர்கள் கூட்ட அரங்கில் வந்து அமர்ந்ததும், ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
ஆனாலும் கூட்ட அரங்குக்கு வந்த 25 உறுப்பினர்களும் 11.30 மணி வரை கூட்ட அரங்கிலேயே அமர்ந்திருந்தனர். நாங்களும் கூட்டத்தில் பங்கேற்றதால், எங்களிடமும் கையெழுத்து பெற வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, தங்களது இருக்கைகளில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 11.40 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
நிலைக்குழு தலைவர்கள்
இந்த நிலையில் மதியம் 2.30 மணிக்கு நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நிலைக்குழு தலைவரை தேர்வு செய்வதற்காக 6 குழுவிலும் தலா 6 உறுப்பினர்கள் என தேர்வு செய்யப்பட்ட 36 உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் மற்ற உறுப்பினர்கள் அரங்கத்துக்குள் செல்ல முடியாதவாறு போலீசார் தடுத்தனர். பின்னர் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆணையரின் செயல்பாட்டை கண்டித்து கூச்சலிட்டவாறு, கூட்ட அரங்கிற்குள் போலீசாரை மீறி சென்று இருக்கையில் அமர்ந்தனர்.
போட்டியின்றி தேர்வு
தேர்தலை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நடத்தினார். இதில் கணக்கு குழு தலைவராக வெங்கடேசன், பொது சுகாதாரக்குழு தலைவராக ஸ்டெல்லாநேசமணி, கல்விக்குழு தலைவராக சந்தானகிருஷ்ணன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராக சத்யா, நகரமைப்பு குழு தலைவராக சுல்தான்ஜெய்லானி, பணிகள் குழு தலைவராக செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் மாநகராட்சி ஆணையருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உடன் இருந்தார்.
மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு
காலையில் காலதாமதமாக வந்த அண்ணா.பிரகாஷ் உள்ளிட்ட 25 கவுன்சிலர்களும் மதியம் முன்கூட்டியே வந்தனர். அவர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேற மறுத்து, கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக எங்களிடமும் கையெழுத்து பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், நிலைக்குழுத் தலைவர் தேர்தலின்போது எந்த கவுன்சிலர்களிடமும் கையெழுத்து பெறவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர் ஒவ்வொரு கவுன்சிலராக கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.