மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி சாவு

குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-03-31 18:52 GMT
குழித்துறை, 
குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி பிணம்
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு புல்லன்விளையை சேர்ந்தவர் குட்டப்பன் (வயது 45). இவருடைய மனைவி அனி (40). தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் குட்டப்பன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்லவில்லை.
பின்னர் மேக்கரை குளத்திற்கு அவர் குளிக்க சென்றார். பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி அனி மற்றும் உறவினர்கள் குளக்கரைக்கு பதற்றத்துடன் ஓடி வந்து பார்த்தனர். அப்போது குட்டப்பன் அணிந்திருந்த துணிகள் இருந்தன. பின்னர் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்திற்குள் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது குளத்தில் இருந்து குட்டப்பன் பிணமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. குளத்தில் குளித்த போது குட்டப்பன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்