நகை- வெள்ளி பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகை- வெள்ளி பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-03-28 16:34 GMT
வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் தாயார் மல்லிகாவுடன் தனது வீட்டில் வசித்து வந்தார். நாகலட்சுமி மற்றும் அவரது தாயார் கோவில் திருவிழாவிற்கு வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்துக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து அதில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், எல்.இ.டி.டி.வி. மற்றும் ரூ.3 லட்சத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு நகைகளை கொள்ளையடித்த நாகை செக்கடி தெருவை சேர்ந்த கொறசேகர் (50), நாகை சிவன் மேலவீதியை சேர்ந்த காளிதாஸ் (49), நாகை கீரக்கொல்லையைசேர்ந்த கார்த்தி (36), வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (31) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பாராட்டினார். மேலும் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கபட்ட தங்கநகைகள்- வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்தார்.
----

மேலும் செய்திகள்