தந்தையின் கல்லறையில் தொழில் அதிபர் பிணம்
புதுக்கடை அருகே தந்தையின் கல்லறையில் தொழில் அதிபர் பிணமாக கிடந்தார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மறுகண்டான்விளையை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது46). இவர் நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூரில் கயிறு தொழிற்சாலை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் பணம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தொழிற்சாலையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால், வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்தநிலையில் நேற்று பிற்பகல் பார்த்தசாரதி தனது தந்தையின் கல்லறை அருகில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் ெதரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.