குமரியில் 35 சதவீத பஸ்கள் இயக்கம்
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
நாகர்கோவில்:
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
வேலை நிறுத்தம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ்அறிவித்து இருந்தது.
அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகள்
அதே போல குமரி மாவட்டத்திலும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. அதைத்தொடர்ந்து அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த முந்திரி தொழிலாளர்கள், தோட்டம் மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிகளுக்கு செல்ல பஸ் வராததால், மாணவிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆட்டோக்களும் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டன.
வங்கி சேவை பாதிப்பு
மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததால் நேற்று வங்கிகளுக்கு குறைவான பணியாளர்களே வந்தனர்.
இதனால் பொதுமக்களுக்கு வழக்கம் போல் பணம் எடுப்பது மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
35 சதவீத பஸ்கள் இயக்கம்
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றனர் இதனால் குறைவான அளவிலேயே பஸ்கள் இயங்கின.
குமரி மாவட்டத்தில் சுமார் 870 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக ஏராளமான டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் வழக்கம்போல பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்று 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதாவது சுமார் 270 பஸ்கள் மட்டும் ஓடின.
பொதுமக்கள் அவதி
இதன் காரணமாக பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குமரி மாவட்ட மக்கள் பணி நிமித்தம் காரணமாக தினமும் நெல்லை மாவட்டத்துக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் நேற்று குறைந்த பஸ்களே நெல்லைக்கு சென்றதால், அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில் நகர் முழுவதும் வலம் வரும் பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் சர்குலர் பஸ்களிலும் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் இருந்தது. இதனால் மினி பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறியதையும் பார்க்க முடிந்தது.
அதோடு கேரளா செல்லும் பஸ்கள் அனைத்தும் களியக்காவிளை வரை மட்டும் இயக்கப்பட்டன. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வள்ளியூருக்கு தனியார் பஸ் ஒன்றும் இயக்கப்பட்டது. பஸ்களின் எண்ணிக்கை குறைந்ததால் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.