பஸ்சில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்
திருவண்ணாமலையில் பஸ்சில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம் செய்தனர்.
திருவண்ணாமலை
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதையொட்டி திருவண்ணாமலையில் சுமார் 40 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்று மாலையில் பள்ளி மற்றும் கல்லூரி முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஏராளமான மாணவர்கள் போதிய பஸ் வசதி இல்லாததால் திரண்டு காணப்பட்டனர்.
இதனால் தனியார் பஸ்களில் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் படிகளில் தொங்கிய படியும், பஸ்சின் பின்பக்க கம்பிகளில் தொங்கிய படியும், சில பஸ்சில் மேற்கூரையில் ஏறி சென்றும் பயணம் செய்தனர்.