மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

கயத்தாறு அருகே சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-28 15:57 GMT
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 51). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கனகலட்சுமி. இவர்களுக்கு செல்வராதிகா, சண்முகபிரியா ஆகிய 2 மகள்களும், பொன் சுதாகர் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவ விடுமுறையில் சங்கர் தனது சொந்த ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் மதியம் சங்கர் சாலைப்புதூரில் இருந்து கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். கயத்தாறு மெயின் ரோட்டில் பணிக்கர்குளம் விலக்கு அருகில் சென்றபோது, திடீரென்று சாலையின் குறுக்காக நாய் ஒன்று பாய்ந்து ஓடியது.

இதனால் சங்கர் நிலைதடுமாறியதால் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இரவில் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரின் இறுதிச்சடங்கு நேற்று சாலைப்புதூரில் நடந்தது. அவரது உடலுக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து போலீசார் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்