தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

ஏரலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

Update: 2022-03-28 15:43 GMT
ஏரல்:
தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் என்ற கண்ணன் (வயது 40). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்ணன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஒரு காரில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்தார். அவர்கள் ஆற்றுப்பாலத்துக்கு மேல்புறம் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏரல் போலீசார் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு வந்து ஆற்றில் இறங்கி கண்ணனின் உடலை தேடினர். நீண்ட நேரம் தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை தீயணைப்பு படையினர் மீண்டும் ஆற்றில் இறங்கி தேடி கண்ணன் உடலை மீட்டனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மூழ்கி இறந்த கண்ணனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்