நாகை மாவட்டத்தில் 25 சதவீத பஸ்கள் ஓடவில்லை
தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 25 சதவீத பஸ்கள் ஓடவில்லை. தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 25 சதவீத பஸ்கள் ஓடவில்லை. தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 சதவீத பஸ்கள் ஓடவில்லை
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ.., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்றும், இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று பொது வேலை நிறுத்தத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 25 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து சேவை சற்று சுணக்கம் ஏற்பட்டது.
சாலை மறியல்
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க கிளை செயலாளர் நீதி கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருமருகல்-கீழ்வேளூர்
இதேபோல திருமருகல் பஸ்நிலையம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருமருகல் தபால் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் பாபுஜி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கீழ்வேளூரில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், சிக்கல் கடைத்தெருவில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமையிலும், சாட்டியக்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சங்க தெற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையிலும், கொளப்பாடு கடைத்தெருவில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வேலு தலைமையிலும் சாலை மறியல் நடந்தது. திருப்பூண்டியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமையிலும், கீழையூரில் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்-தகட்டூர்
தகட்டூர் கடைத் தெருவில் உள்ள அஞ்சலகத்திற்கு எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமையிலும், தலைஞாயிறு அஞ்சல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட விவசாய சங்க செயலாளர் கோவை சுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் கடைதெருவில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விவசாய தொழிலாளர் சங்கங்களின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
500 பேர் கைது
மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலும், 6 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.