கோத்தகிரி
கோத்தகிரி அருகே குயின்சோலை ஹைலைட்ஸ் கைப்பந்து குழுவின் சார்பில் 51-வது ஆண்டு நீலகிரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, குயின்சோலை கிராமத்தில் நடைபெற்றது. மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 62 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியானது லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டது. சிறப்பாக விளையாடிய கூடலூரை சேர்ந்த எஸ்.எப்.எஸ்.சி அணி மற்றும் கூடலூர் திருவள்ளுவர் கைப்பந்து குழு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டி 3 செட்களாக நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 25-23, 25- 21 என்ற செட் கணக்கில் கூடலூர் எஸ்.எப்.எஸ்.சி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற கூடலூர் எஸ்.எப்.எஸ்.சி அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த கூடலூர் திருவள்ளுவர் கைப்பந்து அணிக்கு 12 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும், 3-ம் இடம் பிடித்த குயின்சோலை அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும், 4-ம் இடம் பிடித்த கீழ்கோத்தகிரி ஏ.எஸ்.எப். அணிக்கு 8 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.