திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் 5 பேர் கைது
திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 பவுன் நகை மீட்கப்பட்டது.
நகை- பணம் திருட்டு
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், மணிவண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியன்று சீனிவாசன் தனது மகன் மணிவண்ணனை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்றார்.
இரவு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகையும், ரூ.20 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க துரித நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளிகள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அரவா பாபு (வயது 27), திருவள்ளூரை அடுத்த புதுப்பட்டை சேர்ந்த பாபு (40), பல்லாடா பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் ( 23), பவுன் (21), புதுப்பட்டை சேர்ந்த நாகராஜன் (25) ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட முக்கிய குற்றவாளியான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அரவா பாபு என்பவர் ஆந்திர மாநிலம் நெல்லூர், நகரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டதாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் தனது நண்பர்களான பாபு, ரஞ்சித்குமார், நாகராஜன், பவுன் ஆகியோருடன் இணைந்து மப்பேடு, மணவாளநகர், ஊத்துக்கோட்டை, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோட்டமிட்டு ஆளில்லா வீட்டில் திருடியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 70 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அரவா பாபு, பாபு, ரஞ்சித்குமார், நாகராஜன், பவுன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.