மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் சாலைமறியல்
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் நாகை எம்.பி. மற்றும் 670 பெண்கள் உள்பட 1,350 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் நாகை எம்.பி. மற்றும் 670 பெண்கள் உள்பட 1,350 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 நாட்கள் பொதுவேலைநிறுத்தம்
தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்பாக சுருகுவதை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வருமான வரி வரம்புக்கு கீழ் வருமானம் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் 2 நாட்கள் நடைபெறுதாக மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தது.
சாலைமறியல்
அதன்படி வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, பேரளம், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறபட்டு ரெயில்வே மேம்பாலத்தில் சாலை மறியிலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், தொ.மு.ச. மாவட்ட தலைவர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செல்வராஜ் எம்.பி, விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராஜ் எம்.பி. மற்றும் பெண்கள் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்தனர். வேலைநிறுத்தம் காரணமாக அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலக பணிகள் முடங்கின. திருவாரூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடியது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சாலைமறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில் நடந்தது. மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட 300 பேரை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சார்பில் ரகுபதி, ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கலைச்செல்வன், ஐ.என்.டி.யூ.சி சார்பில் பாண்டியன், எல்.பி.எப் சார்பில் மகாதேவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் மன்னார்குடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்பண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. தபால் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு சார்பில் மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ே்பரளம்
நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ.வை சேர்ந்த வைத்தியநாதன், ஏ.ஐ.டி.யூ.சி.வை சேர்ந்த ராஜா மற்றும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 670 பெண்கள் உள்பட 1,350 பேரை போலீசார் கைது செய்தனர்.
----