இந்திய கடற்கரை கைப்பந்து அணிக்கு தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி தேர்வு

இந்திய கடற்கரை கைப்பந்து அணிக்கு தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-28 13:52 GMT
தேனி:
மதுரை மாவட்டம், மேலூர் தெற்கு தெருவை சேர்ந்த அரசு-மீனாட்சி தம்பதியின் மகள் ஆனந்தி. கைப்பந்து வீராங்கனையான இவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் உள்ள அரசு மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். மேலும், இவர் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். 
ஆனந்தி மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கடந்த 20-ந்தேதி, இந்திய விளையாட்டு குழுமம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் இந்திய கடற்கரை கைப்பந்து பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டி நடந்தது. இதில், மாணவி ஆனந்தி கலந்துகொண்டு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், பிரான்சில் விரைவில் நடக்கும் கடற்கரை கைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். இந்திய அணியில் இடம் பிடித்த மாணவியை, தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்