கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி: புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டண சாலையாக நிர்வகிக்கிறது. இந்நிலையில், இரு வழிப்பாதையாக உள்ள மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் லாரி, கார், இரு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் என ஒன்றோடு ஒன்று மோதி அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதையடுத்து இங்கு சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், இந்த சாலையை கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சரகம் நான்கு வழிப்பாதையாக மாற்றி, தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன் முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் வழியாக மாமல்லபுரம் முதல் முகையூர் வரை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்த தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிப்பட்டுள்ள நிலையில், சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், இந்த பணிக்காக தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள கட்டிடங்கள் ஏற்கனவே இடிக்கப்பட்டு விட்டன. இதற்கிடையில், கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பம் பகுதியில் மின் எந்திரத்தின் மூலம் தார் கலக்கும் பணி மற்றும் கான்கிரீட் கலவை தயாரிப்பு உள்ளிட்ட சாலை பணிகளுக்காக மின்சாரம் தேவைப்படுவதால், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை கிரேன் உதவியுடன் தற்போது புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், முக்கிய இடங்களில் மின்சாரத்தை பகிர்ந்து கொடுப்பதற்காக புதிய டிரான்ஸ்பார்கள் அமைக்கப்பட உள்ளன.