மனைவி, மகளுடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி மனைவி மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி மனைவி மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
தானிப்பாடி அருகே உள்ள தா.வேலூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திகேயன் தனது மனைவி சித்ரா மற்றும் மகள் காவியாவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் கையில் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெய்யை தனது மீதும், மனைவி மற்றும் மகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து கார்த்திகேயனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
வட்டிகேட்டு மிரட்டுகின்றனர்
நான் எங்கள் பகுதியில் உள்ள ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி திருப்பி செலுத்தினேன். வட்டி மட்டும் ரூ.36 ஆயிரம் செலுத்தி உள்ளேன். மேலும் 15 மாதம் வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருடன் மற்றொரு நபரும் சேர்ந்து கொண்டு எனது நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடு என்று மிரட்டுகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் எனது வீட்டை பூட்டி விட்டு எங்களை அடித்து மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தலைமை காவல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அவர் குறைத்தீர்வு கூட்டத்தில் மனு அளித்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.