மத்திய அரசு ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் ‘அபேஸ்’

அரும்பாக்கத்தில் மத்திய அரசு ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்தை ரகசியமாக திருடிய வேலைக்கார பெண் காதலனுடன் புதுச்சேரியில் பிடிபட்டார்.

Update: 2022-03-28 12:08 GMT
மத்திய அரசு ஊழியர்

அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியைச் சேர்ந்தவர் அகஸ்டின் வின்பிரட் (வயது 58). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான இவர், வீடு கட்டுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள வங்கியில் இருந்து பணத்தை எடுக்க சென்றார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம் மாயமானது தெரியவந்தது. வேறு ஒரு நபரின் வங்கி கணக்குக்கு பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்ததை அறிந்து அகஸ்டின் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அரும்பாக்கம் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கே.கே.நகர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (31), என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சம் பணம் பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.

மடக்கி பிடித்தனர்

மேலும் விசாரணையில், அகஸ்டின் வீட்டில் சில வருடங்களாக வேலை செய்து வந்த வளர்மதி மற்றும் அவரது மகள் சுமித்ரா (19) ஆகிய இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேக பார்வை வேலைக்கார பெண்ணின் மீது விழுந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து புதுச்சேரியில் தங்கியிருந்த சுமித்ரா மற்றும் அவருடன் தங்கியிருந்த அவரது காதலன் சதீஷ்குமார் (32), ஆகிய 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

காதலருடன் பெண் கைது

விசாரணையில், வீட்டு வேலைக்கு மகள் சுமித்ராவை வளர்மதி அழைத்து வந்தபோது, அகஸ்டினுக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்த சுமித்ரா, அகஸ்டின் வங்கி கணக்கில் இருந்து தனது காதலன் சதீஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு பணத்தை சிறிது, சிறிதாக பணத்தை அனுப்பி வைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 புதிய செல்போன்கள், ரூ.90 ஆயிரம் பணம், 3 பவுன் நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சுமித்ரா, சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்