குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 82). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் ஏரியையொட்டி உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தர்மலிங்கம் ஏரியில் தவறி விழுந்திருக்கலாமோ என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், நேற்று இது குறித்து வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஏரியில் இறங்கி தேடினர். இதில் ஏரியில் இருந்து தர்மலிங்கத்தை பிணமாக மீட்டனர். தர்மலிங்கம் ஏரிக்கரையின் ஓரமாக நடந்து சென்றபோது தவறி அல்லது வழுக்கி ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.