கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறலாம்

கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-27 22:18 GMT
பெரம்பலூர்:
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டு காலத்திற்கு மேல் இருக்க வேண்டும். தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. அரசின் வேறு எந்த இணை வீட்டு வசதி திட்டங்களில் பயன்பெற்றிருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 20 ச.மீ. வீட்டு மனை இருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் வீட்டு மனை பட்டா இருக்க வேண்டும். அல்லது உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டு மனை கூட்டுப் பட்டா இருக்க வேண்டும். மேற்காணும் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை https://tnuwwb.tn.gov.in/ என்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்