பி.எம்.டி.சி. பஸ் மோதி காட்டு யானை செத்தது

பெங்களூரு அருகே பி.எம்.டி.சி. பஸ் மோதி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது;

Update: 2022-03-27 22:13 GMT
பெங்களூரு: பெங்களூரு அருகே பி.எம்.டி.சி. பஸ் மோதி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

காட்டு யானை செத்தது

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா அருகே கனகபுரா ரோட்டில் கடந்த 25-ந் தேதி இரவு பி.எம்.டி.சி. (அரசு) பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை, கனகபுரா ரோட்டை கடந்து செல்ல முயன்றது. அந்த சந்தா்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், காட்டு யானை மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த யானை கீழே விழுந்தது. பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.


இதையடுத்து, அரசு பஸ்சை டிரைவரும் அங்கிருந்து ஓட்டி சென்று விட்டார். இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் (நேற்று முன்தினம்) காலையில் விபத்து நடந்த பகுதிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது கனகபுரா ரோட்டில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் ஒரு யானை செத்து கிடந்தது. அந்த யானைக்கு 23 வயது இருக்கும் என்றும், யானையின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு பஸ் மோதியதால்...

அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரஹள்ளி பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து ஒரு யானை, விவசாய பயிர்களை மிதித்து சேதப்படுத்தி இருந்தது. அந்த யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி இருந்தார்கள். அந்த யானை தான் மீண்டும் உணவு தேடி பன்னரகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என்றும், அரசு பஸ் மோதியதில் காயம் அடைந்த யானை வனப்பகுதிக்குள் சென்று உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


இருப்பினும் யானையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும், அந்த அறிக்கை இன்னும் 2 நாட்களில் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்