வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய சிறப்பு பூஜை
வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய சிறப்பு பூஜை நடந்தது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவில் பல வருடங்களாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதையடுத்து இக்கோவிலை சீரமைத்து திருப்பணிகள் செய்ய இந்து சமய அறநிலையத் துறையிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நிதி திரட்டி புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் நிதி வசூலித்து வரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிப்பதற்காக பாலாலயம் செய்ய சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை செயல் அலுவலர் யுவராஜா, ஆய்வாளர் கேசவன், விக்கிரமங்கலம் கிராம நாட்டாமைகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.