திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் லாரி நின்றது; 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் இருசக்கர வாகனம், கார், பஸ், லாரி, வேன், சரக்கு ஆட்ேடா, கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் இந்த மலைப்பாதை தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ளது.
மலைப்பாதை குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகின்றன. சில நேரம் பாரம் தாங்காமல் வாகனங்கள் கவிழ்ந்தும் விடுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
லாரி நின்றது
இதுதவிர கோர்ட்டு உத்தரவின்பேரில் வனவிலங்கள் உயிரிழப்பதை தடுக்க திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திம்பம் மலைப்பாதையில் தினமும் பகல் நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு கன்டெய்னர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று காலை 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முயன்ற போது குறுகியதாக இருந்ததால் லாரி திரும்ப முடியாமல் அப்படியே நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனம் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த வேறு லாரி டிரைவர், திரும்ப முடியாமல் நின்ற லாரி மீது ஏறி அதை இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின்னரே மற்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட தொடங்கின. அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதியம் 1 மணி அளவில் போக்குவரத்து நிலைமை சீரானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.