பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவ-மாணவிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெருந்துறை
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு தொடக்கப்பள்ளி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முள்ளம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது. பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முள்ளம்பட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 15 மாணவ-மாணவிகள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறையை அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளே சுத்தம் செய்வதுபோல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவரிடம், ‘நீங்கள் ஏன் கழிப்பறையை சுத்தம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் நான் 4-ம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிக்கு முதலில் வருபவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யவேண்டும் என்று ஆசிரியை கூறியுள்ளார். அதனால் செய்கிறேன்’ என்கிறார்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறும்போது, ‘பள்ளிக்கூடத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, பாடம் கற்பிப்பதை விட்டு அவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது முறையா?,
தூய்மை பணியாளர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செய்யும் வேலையை பள்ளிக்குழந்தைகளிடம் ஒப்படைப்பதா?, தங்களுைடய குழந்தைகளாக இருந்தால் இப்படி செய்வார்களா?.
கல்வித்துறை அதிகாரிகள் உடனே இதில் தலையிட்டு பள்ளிக்குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.