வியாபாரியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 5 பேர் கைது
வியாபாரியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்
கொள்ளிடம் டோல்கேட்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 43). பிளாஸ்டிக் பொருள் மொத்த வியாபாரியான இவர், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருச்சியில் உள்ள கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்துவிட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை பணம் வசூல் செய்து வருவது வழக்கம். கடந்த 12-ந் தேதி தினேஷ்குமார் வழக்கம்போல் திருச்சி சென்று பணம் வசூல் செய்தார். நள்ளிரவு நேரமானதால் வசூல் செய்த பணத்தை திருச்சியில் தனது உறவினர் வீட்டில் கொடுத்து விட்டு காரில் சேலத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆமூர் அருகே சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம ஆசாமிகள் காரை வழிமறித்து தினேஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ்குமாரிடம் வியாபாரம் செய்து வந்த சின்ன கம்மாளத்தெரு பகுதியை சேர்ந்த ஹஞ்ஜாராம்(23) திட்டப்படி அவரது நண்பர்களான திருச்சி அண்ணா நகர் இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த சந்துரு (21), மற்றொரு சந்துரு (22), அப்துல்சலீம் (21), திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மணிமாறன்(36) ஆகிய 4 பேரும் தான் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.