ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.4 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.4 ஆயிரம் போலீசில் ஒப்படைத்த எலக்ட்ரீசியனின் நேர்மைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம்:-
சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் முத்து (வயது 32). இவர், அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி விட்டு ரகசிய எண்ணை பதிவு செய்யாத நிலையில் ரூ.4 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த பணத்துடன் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். யாரும் வரவில்லை. உடனே முத்து அந்த பணத்தை அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரிடம் ஒப்படைத்தார். போலீசார் உரியவரிடம் பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் உரியவரிடம் ஒப்படைக்க போலீஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த முத்துவின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.