சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-03-27 20:58 GMT
சேலம்:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நெத்திமேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் புஷ்பா மான்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
ஒப்பாரி வைத்து எதிர்ப்பு
மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவரும், சேலம் மாநகராட்சி துணை மேயருமான சாரதா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மகிளா காங்கிரஸ் சார்பில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும், என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி வளர்மதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பச்சப்பட்டி பழனிசாமி, தனசேகர், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்