தஞ்சை பெரியகோவில் செல்ல வசதியாக நடைபாலம் அமைக்கப்படுமா?
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலையை கடந்து செல்ல சிரமமாக இருப்பதால் தஞ்சை பெரியகோவில் செல்வதற்கு வசதியாக நடைபாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.;
தஞ்சாவூர்:
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலையை கடந்து செல்ல சிரமமாக இருப்பதால் தஞ்சை பெரியகோவில் செல்வதற்கு வசதியாக நடைபாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
தஞ்சை பெரியகோவில்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் கோவில்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவையாகும். மேலும் தமிழர் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவில் அற்புதமான கட்டிட கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்திலேயே மாமன்னன் ராஜராஜசோழனால் கி.பி. 1,004-ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளில் அதாவது கி.பி. 1,010-ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரியகோவில். இன்று உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் கட்டிட கலைநுட்பத்துக்கு சான்றாக யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.
பக்தர்கள் வருகை
இத்தகைய தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவிலில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகிஅம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், கருவூரார், நடராஜர் ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றன. மேலும் பெரிய நந்தி சிலையும் உள்ளது.
தஞ்சை பெரியகோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
சாலை
தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் மற்ற தினங்களை விட விடுமுறை தினங்களில் தஞ்சை பெரியகோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பலர் ரெயில்கள், பஸ்கள் மூலமாக தஞ்சைக்கு வந்தாலும் பெரும்பாலானோர் கார், சுற்றுலா பஸ், வேன்களில் வருகின்றனர். இவர்கள் பெரியகோவிலுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, சாலையை கடந்து தான் கோவிலுக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்படி இவர்கள் செல்லும் நேரத்தில் சாலையின் இருபுறமும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதால் கோவிலுக்குள் செல்பவர்கள் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சாலையின் இருபுறமும் வரக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே கோவிலுக்குள் செல்பவர்களாலும், கோவிலில் இருந்து வெளியே வருபவர்களாலும் சாலையை கடந்து செல்ல முடியும்.
போக்குவரத்து நெரிசல்
அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமானோர் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்து இருந்தனர். இவர்கள் தங்களது வாகனங்களை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, பெரியகோவிலுக்குள் செல்வதற்காக வந்தனர்.
பெரியகோவிலிலுக்கு முன்புள்ள சாலையில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பின்னர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார், சாலையின் இருபுறமும் வந்த வாகனங்களை நிறுத்திவிட்டு, சாலையோரம் காத்து நின்றவர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
எதிர்பார்ப்பு
அதேபோல் கோவிலில் இருந்து வந்தவர்களும் சாலையை கடந்து தங்களது வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு சென்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பெரியகோவில் சாலையை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் நடைபாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தஞ்சை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக பெரியகோவில் சாலை உள்ளது. பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவிற்கு பிறகு பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது சகஜநிலை வந்துவிட்டதால் தினமும் பக்தர்கள் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவர்கள் எந்தவித சிரமும் இன்றி சாலையை கடந்து பெரியகோவிலுக்கு செல்லும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும் என்றனர்.