தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.;
வேகத்தடை வேண்டும்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி பட்டுக்கோட்டை சாலை வண்டிப்பேட்டை பகுதியில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வேகமாக வரும் வாகனங்களினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அபூபக்கர், அதிராம்பட்டினம்.
மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மேட்டுதெரு அருகே சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடி செல்கிறது. இதனால் காற்றுவீசும் போது மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி வெளியாகின்றன. அதுமட்டுமின்றி மின்கம்பத்துக்கு அருகே வளர்ந்துள்ள மரங்களின் கிளைகளும் மின்கம்பிகளுடன் சிக்கிகொள்கின்றன. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்கவும், மின்கம்பிகளை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாபு, அம்மாப்பேட்டை.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் சீனிவாசம்பிள்ளை சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள்வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பார்களா?
-மருவரசன், தஞ்சாவூர்.