முக்கூடல் அருகே என்ஜினீயரிங் மாணவி கடத்தல்; வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, என்ஜினீயரிங் மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்;
முக்கூடல்:
முக்கூடல் அருகே, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, என்ஜினீயரிங் மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவி கடத்தல்
தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான என்ஜினீயரிங் மாணவிக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஷாஜகான் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை தேனிக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
கைது
இதற்கிடையே மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, தேனியில் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.