காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலை முயற்சி
அருப்புக்கோட்டை அருகே காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
செல்போன் பறிப்பு
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணும், அவருடைய காதலன் ஹரிகிருஷ்ணன் (வயது 24) கடந்த 23-ந் தேதி இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சென்றபோது 3 ரவுடிகளால் வழிமறிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட நிலையில் அவர்களது செல்போனும் பறிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மாஸ்வரன்(24), விருதுநகர் மாவட்டம் நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ் குமார் (24), அஜித்குமார்(24) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ்ந்தநிலையில் பத்மாஸ்வரனையும், தினேஷ்குமாரையும் கைது செய்ய சென்ற போலீசாரை அவர்கள் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தற்கொலை முயற்சி
தப்பிச்சென்ற அஜித்குமாரையும் திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து தனது காதலியுடன் ஊர் திரும்பிய ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை ஹரி கிருஷ்ணனின் காதலி 19 வயது இளம் பெண் தனது வீட்டு தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றபோது, அவரது பெற்றோர் அதனை தடுத்து அந்த பெண்ணை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றி அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.