சிவகங்கை அருகே ஒரே நாளில் 3 கோவில்களில் புகுந்து துணிகர கொள்ளை
சிவகங்கை அருகே ஒரே நாளில் 3 கோவில்களில் புகுந்து கொள்ளையர்கள் அம்மனின் தங்கத்தாலி, குத்துவிளக்குகளை கொள்ளையடித்து சென்றனர்.
சிவகங்கை,
சிவகங்கை அருகே ஒரே நாளில் 3 கோவில்களில் புகுந்து கொள்ளையர்கள் அம்மனின் தங்கத்தாலி, குத்துவிளக்குகளை கொள்ளையடித்து சென்றனர்
கோவில்களில் கொள்ளை
சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தில் நாகவள்ளி அம்மன் கோவில், தென்னந்தேவி விநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த கோவில்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம கொள்ளையர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த அம்மன் தங்க தாலி, பித்தளை குத்துவிளக்குகள், என ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர்.அத்துடன் முத்துமாரியம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்து சென்றுள்ளனர்.
போலீசில் புகார்
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்கவந்த பூசாரிகள் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.