ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விவசாயி பலி; டிரைவர் படுகாயம்
கிணற்றில் மூழ்கியவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது குளித்தலை-மணப்பாறை சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விவசாயி பலியானார். படுகாயம் அடைந்த டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குளித்தலை,
விவசாயி
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போத்துராவுதன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45), விவசாயி. இவர் நேற்று அதே ஊரை சேர்ந்த வீரமலை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் சென்று வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் கிணற்றில் குதித்து தேடினர்.
அப்போது தண்ணீரில் மூழ்கி இருந்த சுப்பிரமணியை அவர்கள் மேலே தூக்கினர். பின்னர் அவரை பஞ்சப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல்சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சுப்பிரமணியை அவரது உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது
குளித்தலை- மணப்பாறை சாலையில் மையிலாடி பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டின் மீது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக சென்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதுபோல் விபத்தில் காயமடைந்த ஆடும் செத்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரான வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (21) படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த டிரைவரான வெங்கடேசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை
குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற டிரைவர் வெங்கடேஷ் பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.