கல்லூரி மாணவி வீட்டில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
கடலூரில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் ஆறுமுகம்பிள்ளைதெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). மெக்கானிக்கான. இவர் புனித வளனார் கல்லூரி அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். ஜெகதீஸ்வரன் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயதான மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
தீ வைத்து எரிப்பு
இதையறிந்து ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரன் நேற்று அந்த மாணவியின் வீட்டுக்கு குடிபோதையில் சென்று, அங்கிருந்த அவரது அண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.