அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை
சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி நகர தலைவர் ரகுநாதன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர பொருளாளர் பொற்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
டிரைவர்கள் மீது நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் புதிதாக கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது. அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றுவது. அனைத்து பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும்.
புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாத பஸ் டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
தரமான அரிசி
அனைத்து பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.