மூதாட்டி படுகொலை
சிந்தாமணிப்பட்டி அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தரகம்பட்டி,
பல் டாக்டர்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியபிள்ளை. இவருடைய மனைவி லட்சுமி அம்மாள் (வயது 75). இவருக்கு பத்மா (59), மகேஸ்வரி (39) என்ற 2 மகள்களும், சிவக்குமார் (37) என்ற மகனும் உள்ளனர். இதில், சிவக்குமார், சென்னையில் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மகள்களுக்கு திருமணமாகி சென்று விட்டதால் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மூத்த மகள் பத்மா திருச்சியில் வசித்து வருகிறார். இந்தநிலையில், இவருடைய கணவர் நினைவுநாளையொட்டி சிந்தாமணிப்பட்டி அருகே உள்ள காக்காவீரியம்பட்டிக்கு வந்திருந்தார். பின்னர் மாமரத்துப்பட்டியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றார்.
மூதாட்டி கொலை
அப்போது வீட்டின் முன்புறம் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, பின்பக்கம் வழியாக சென்று பார்த்தபோது லட்சுமி அம்மாள் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மர்ம ஆசாமிகள் லட்சுமி அம்மாளின் தலையில் தொலைக்காட்சி பெட்டியை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்து இருந்த நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து செல்லவில்லை. இதனால் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்து உள்ளது.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர் கரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.