இளையான்குடியில் ரூ.3¾ கோடியில் புதிய பஸ் நிலைய பணிகள்

இளையான்குடியில் ரூ.3¾ கோடியில் புதிய பஸ் நிலைய பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

Update: 2022-03-27 18:14 GMT
இளையான்குடி,
இளையான்குடியில் ரூ.3¾ கோடியில் புதிய பஸ் நிலைய பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
புதிய பஸ் நிலையம்
இளையான்குடியில் ரூ.3¾ கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தார்.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா அனைவரையும் வரவேற்றார்
விழாவில் மானாமதுரை தொகுதி தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-
பல்வேறு வசதிகள்
 கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ.3¾ கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பஸ் நிலையம் 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 2½ ஏக்கர் பரப்பளவில் தற்சமயம் பணிகள் ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் 8 பஸ்கள் நிற்கும் நடைமேடை, 8, கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாக்கும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறை, உணவகம், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புச்சுவர் மின்விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் ஆண்கள், பெண்கள் என தனித்தனி கழிப்பறைகள், உட்புறம் சிமெண்ட் சாலைகள், பயணிகள் அமரும் இருக்கைகள் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக அமைச்சர், கலெக்டர், அரசு அதிகாரிகள் இளையான்குடி கூட்டுறவு நகர வங்கி தலைவர் நஜிமுதீன், துணைத்தலைவர் நாசர், பேரூராட்சி துணைத்தலைவர் சபுரியத் பீவி, ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் ஒன்றிய செயலாளர்கள் வெங்கட்ராமன், ஆறு.செல்வராஜன், தமிழ்மாறன், நகர அவைத்தலைவர் செய்யதுகான், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், முருகானந்தம், பெரியசாமி, அய்யாச்சாமி உதயகுமார், புலியூர் முருகேசன் மற்றும் இளையான்குடி ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்