நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-03-27 17:42 GMT
அன்னவாசல்:
பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான திருவிழா நேற்று இரவு பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பூக்களை தட்டுகளில் சுமந்தவாறும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் எடுத்து சென்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பால்குட ஊர்வலம்
முன்னதாக புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், வேல் குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பால்குடங்களில் எடுத்து வந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தேரோட்டம்
இதைதொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
கீரனூர், புதுக்கோட்டை  
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதலை முன்னிட்டு கீரனூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் முத்து மாரியம்மன் சிலையை வைத்து மேள, தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் நார்த்தாமலை வரை நடந்தே சென்று அம்மனுக்கு பூக்களை கொட்டி வழிபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து பக்தர்கள் பலர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் சிலை வைத்தும், பூக்களை எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். 
மகாசக்தி மாரியம்மன் கோவில் 
இதேபோல் புதுக்கோட்டை பூங்காநகர் ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூமார்க்கெட்டில் குவிந்த மக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று அம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பூக்கள் விற்பனை புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் அமோகமாக நடைபெற்றது. பக்தர்கள், வியாபாரிகள் பூக்களை வாங்க மார்க்கெட்டிற்கு அதிகம் வந்ததால் கூட்டம் அலைமோதியது. 

மேலும் செய்திகள்