மாற்றுத்திறனாளிகளுக்கான மறுமதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுமதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.;
ஆவூர்:
விராலிமலை வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுமதிப்பீட்டு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமை விராலிமலை ஒன்றியக்குழு தலைவர் காமுமணி தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் வரவேற்று பேசினார். முகாமில் விராலிமலை ஒன்றிய பகுதியில் இருந்து 209 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 146 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. 12 பேரின் மனுக்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 51 பேர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உபகரணங்கள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. முடிவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முடநீக்கியல் வல்லுநர் ஜெகன்முருகன் நன்றி கூறினார். முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.