விழுப்புரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது
விழுப்புரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நேற்று முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, பேரூராட்சி, நிர்வாகிகளுக்கான உள்கட்சி தேர்தல் நேற்று விழுப்புரத்தில் 2 இடங்களில் நடைபெற்றது.
3 நகரம், 5 பேரூராட்சி, 22 ஒன்றியங்களை சேர்ந்த 270 பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அவை தலைவர், செயலாளர், 2 துணை செயலாளர்கள், இணை செயலாளர், பொருளாளர், 3 பிரதிநிதி என 9 பதவிகளுக்கு விருப்ப மனு பெறப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாய கூடம், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஆகிய இடத்தில் நடைபெற்றது. இதில், மரக்காணம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், வானூர், கிளியனூர், கண்டமங்கலம் வடக்கு, தெற்கு, கோலியனூர் வடக்கு, தெற்கு, காணை கிழக்கு மற்றும் மேற்கு, விக்கிரவாண்டி வடக்கு, தெற்கு, மயிலம் கிழக்கு, மேற்கு ஒன்றியம், ஒலக்கூர் கிழக்கு, மேற்கு, வல்லம் வடக்கு, தெற்கு, செஞ்சி கிழக்கு, மேற்கு, மேல்மலையனூர் வடக்கு, தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு விழுப்புரம் கரும்பு விவசாயிகளின் திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெற்றது.
அதே போல் விழுப்புரம் நகரம் வடக்கு மற்றும் தெற்கு, திண்டிவனம், கோட்டகுப்பம் நகரங்கள், மரக்காணம், வளவனூர் விக்கிரவாண்டி, அனந்தபுரம், செஞ்சி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்கள்
உள்கட்சி தேர்தலை, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளருமான ஓ. எஸ். மணியன், முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட அவை தலைவருமான ஜீவானந்தம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் விழுப்புரம் நகர நிர்வாகிகள் பட்டியலை நகர செயலாளர் வண்டி மேடு ராமதாசிடம் பெற்றுக்கொண்ட பொறுப்பாளர்கள் பணம் கட்டியவர்களுக்கு ரசீது வழங்கி தேர்தல் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இவற்றில் பெரும்பாலானோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜூனன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.