சர்வதேச போட்டிக்கு கோவை மாணவி தேர்வு

மும்முறை தாண்டுதலில் சர்வதேச போட்டிக்கு கோவை மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-03-27 16:59 GMT
கோவை

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த பள்ளி மாணவி திவ்யஸ்ரீ நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று 5.53 மீட்டர் தூரம் தாண்டி 3-ம் இடம் பிடித்தார். 

வெண்கலம் வென்ற அவரை சக வீரர்கள் வாழ்த்தினர். மேலும் இதே தொடரில் அவர் மும்முறை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 11.97 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். இதையடுத்து பிரான்சு நாட்டில் வருகிற மே மாதம் 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் சர்வதேச அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளார். 

இந்த போட்டியில் 70 நாடுகளை சேர்ந்த 3,500 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இந்த சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்ற மாணவி திவ்யஸ்ரீயை பயிற்சியாளர் நந்தகுமார், சக மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்