வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே அகற்ற அறிவுறுத்தல்.
வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே அகற்ற அறிவுறுத்தல்.;
வேலூர்
வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கிறார்கள். அதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆற்காடு சாலையில் ஏராளமான ஓட்டல்கள், மருந்துக்கடைகள், டீக்கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கடையின் முன்பகுதியில் மேற்கூரைகள் அமைத்திருந்தனர். தள்ளுவண்டி கடைகள் சாலையோரம் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டன. அதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அந்த சாலையில் காமராஜர் சிலை சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் வரை ஆக்கிரமிப்புகள் இன்று (திங்கட்கிழமை) அகற்றப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் கடை, வீடு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொக்லைன் எந்திரம் மூலம் இன்றுஹ (திங்கட்கிழமை) இடித்து அகற்றப்படும் என்று ஆட்டோ மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.