11 மாதங்களுக்கு பின்னர் தொட்டபெட்டா மலைச்சிகரம் திறப்பு
11 மாதங்களுக்கு பின்னர் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி
11 மாதங்களுக்கு பின்னர் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தொட்டபெட்டா மலைச்சிகரம்
தமிழகத்தில் உயரமான மலைச்சிகரமாக ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச்சிகரம் விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,636 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிமாநிலங்கள், மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து சென்றனர்.
கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின் ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி முதல் பிற அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது.
சாலை பழுது
தொடர் மழையால் தொட்டபெட்டா சாலையில் ஒரு பகுதி பெயர்ந்து சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
அங்கு சோதனைச் சாவடி மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்தது.
முதலில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க ரூ.19 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
11 மாதங்களுக்கு பிறகு திறப்பு
பின்னர் மழைநீர் செல்லும் வகையில் ரூ.15 லட்சத்தில் கான்கிரீட்டால் ஆன குழாய்கள் கட்டி சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து இருபுறமும் சாலை போடப்பட்டது.
இந்த நிலையில் சீரமைக்கப்பட்ட தொட்டபெட்டா மலைச்சிகர சாலை திறக்கப்பட்டு அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 11 மாதங்களுக்கு பின்னர் தொட்டபெட்டா சுற்றுலா தலம் திறக்கப்பட்டதால் வார விடுமுறை நாளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சீரமைக்கப்பட்ட சாலை வழியாக தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு சென்றனர்.
சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
அங்கு நுழைவு டிக்கெட் எடுத்து, நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், கோவை, அணை பகுதிகளில் மாநில எல்லைகள் உள்ளிட்ட பகுதிகள், மாநில எல்லைகளை கண்டு ரசித்தனர்.
உயரமான மலைச்சிகரத்தில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இயற்கைக் காட்சிகளை பார்த்து பொழுதை போக்கினர். 11 மாதங்களுக்கு பின்னர் தொட்டபெட்டா திறக்கப்பட்டதால், அங்கு வியாபாரம் செய்து வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.