தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஆலோசனை கூட்டம் நெமிலியில் நடந்தது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுக்காவிற்கு உட்பட்ட இருளர், பழங்குடி, மலைவாழ் மக்களுக்கான அரசு நலத் திட்டங்கள் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆலோசனை கூட்டம், மாவட்ட துணை தலைவர் தணிகாசலம் தலைமையில் நடந்தது. சங்கர், செல்லப்பா, தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத் தலைவர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஒடுக்கப்பட்ட இருளர், மலைவாழ், பழங்குடியின மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்றுவரை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இலவச வீட்டுமனை, வீட்டுமனை பட்டா, அரசு தொகுப்பு வீடுகள், குடிநீர், மின்சாரம், சாலை வசதி, குடும்ப அட்டை, சாதிசான்று (எஸ்.டி) உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை பெறுவதில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். எனவே அனைவரும் நமக்கான தேவைகளை குறித்த நேரத்தில் பெற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் வேலு, ஜெயமாலினி, மணி, சீனிவாசன், வெங்கடேசன் மற்றும் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.