ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்துக்கு ‘90 வயது’

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்துக்கு வருகிற 1-ந் தேதி 90 வயதாகிறது. இதையொட்டி விழா கொண்டாட ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2022-03-27 16:20 GMT
பொள்ளாச்சி

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்துக்கு வருகிற 1-ந் தேதி 90 வயதாகிறது. இதையொட்டி விழா கொண்டாட ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

சரக்கு முனையம்

பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் கடந்த 1932-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் செயல்பட தொடங்கியது. மேலும் மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும்போது ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்கப்பட்டு இருந்தது. 

இதை தவிர ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிந்த பிறகு தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

90 வயது

இதற்கிடையில் ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்திற்கு வருகிற 1-ந் தேதி 90 வயதாகிறது. இதையொட்டி விழா நடத்துவதற்கு ஆனைமலை ரோடு ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் பாலக்காடு கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கும், தென்னக ரெயில்வேக்கும் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினர். இதற்கு பாலக்காடு கோட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்தி கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. இதை தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆனைமலை ரோடு ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

ஆங்கிலேயர் காலத்தில் ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சரக்கு முனையத்தில் இருந்து காடம்பாறை அணை கட்டுவதற்கு மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது ஆனைமலை பகுதிகளில் இருந்து தினமும் கேரளாவிற்கு பால் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு சரக்கு முனையம் இல்லை. ரெயில்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

விழா நடத்த அனுமதி

கொரோனா பரவலுக்கு முன்பு ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் ரெயிலில் பயணம் செய்தனர். ஆனால் அதன்பிறகு நிறுத்தம் இல்லை என்ற அறிவிப்பு, ரெயில்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக ரெயில் நிலையம் முக்கியத்துவம் இழந்து விட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்கிறது. தற்போது ரெயில் நிலையத்திற்கு 90 வயதாகி விட்டது. 

ரெயில் நிலைய வளாகத்தில் விழா நடத்தி கொள்ள ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.  இருப்பினும் ரெயில் நிலையம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 1-ந் தேதி சுப்பேகவுண்டன்புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விழாவில் கலந்துகொள்ள மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்