முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

Update: 2022-03-27 16:19 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

பறவைகள் கணக்கெடுப்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதை தவிர அரிய வகை பறவை இனங்கள், தாவர இனங்களும் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் கோடைகாலம், குளிர்காலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பது நடத்தப்படுகிறது. 

இந்த நிலையில் முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. முன்னதாக பொள்ளாச்சி அருகே அட்டக்கட்டியில் உள்ள வனஉயிரின பயிற்சி மையத்தில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பறவைகளை எப்படி கணக்கெடுப்பது? குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

வால்பாறை வனச்சரகம்

உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட வரகளியாறு, சின்னாறு, கரியான்சோலை உள்ளிட்ட பகுதிகளில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலும், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சர்க்கார்பதி, நவமலை உள்ளிட்ட பகுதிகளில் வனச்சரகர் புகழேந்தி தலைமையிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் மேற்பார்வையில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லார், நீரார் பகுதிக்குள் வனவர் திருநாவுக்கரசு தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், கோவை இயற்கை மையத்தின் தன்னார்வலர்கள் என 15 பேர் அடங்கிய குழுவினர் நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். 

பறவைகளின் சத்தம் மூலம் எந்த வகையானது, உள்நாட்டை சேர்ந்ததா, வெளிநாட்டை சேர்ந்ததா என்பதை கண்டறிந்து, கணக்கெடுப்பின் நேரம், காலநிலை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டது.

தோகை விரித்தாடிய மயில்

இதன் மூலம் அடுத்த ஆண்டு இதே காலநிலையில் அந்த பறவைகள் அங்கு வருகிறதா அல்லது இடையூறு ஏற்பட்டு இடம்பெயர்ந்து சென்று உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடலாம். இதை அறிந்து இடையூறை சரி செய்து பறவைகள் தடையின்றி வந்து செல்ல  நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கெடுப்பின்போது நீரார் வனப்பகுதியின் ஒரத்தில் மயில் ஒன்று தோகை விரித்தாடியது. இது வனத்துறையினரை வசீகரித்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் முட்புதர் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், ஈரமான இலையுதிர் காடுகள், சோலைக்காடுகள், புல்வெளி காடுகள் என 9 வகையான காடுகள் உள்ளன. இங்கு முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

நேர்கோட்டு பாதை

ஏற்கனவே கடந்த மாதம் சமவெளி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து வகையான காடுகளிலும் நேர்கோட்டு பாதை அமைத்து பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது. 

நேர்கோட்டு பாதையை சுற்றி உள்ள பாதைகளிலும், மேலும் நிற்கும் இடங்களில் 360 டிகிரில் பறக்கும் பறவைகளும் கணக்கெடுக்கப்படுகிறது. கழுகு உள்பட அனைத்து பறவைகளும் கணக்கெடுக்கப்படும். கணக்கெடுப்பு விவரங்கள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்