திருட்டுப்போன 15 பவுன் நகைகளை வீசி சென்ற மர்மநபர்கள். .போலீசார் விசாரணை

திருட்டுப்போன 15 பவுன் நகைகளை வீசி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-27 16:15 GMT
வேலூர்

வேலூரை அடுத்த திருமலைக்கோடி நம்பிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது 49), வக்கீல். இவர் கடந்த 23-ந் தேதி குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 50 பவுன் நகைகளில் 27 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. வீட்டின் முன், பின்பக்க கதவின் பூட்டோ, பீரோவோ, ஜன்னல் கம்பியோ உடைக்கப்படவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரியூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

வீட்டின் பணிபுரியும் நபர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் நகைகளை திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இந்த நிலையில் செந்தமிழ்செல்வன் வீட்டு வளாகத்தில் திருட்டு போன 27 பவுன் நகைகளில் 15 பவுன் நகைகள் கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த நகைகளை கைப்பற்றி அவற்றை வீசி சென்ற மர்மநபர்கள் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்