‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
பயணிகள் அவதி
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொம்பேறிப்பட்டி, வடமதுரைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தின் பின்புறம் உள்ள நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
பழுதடைந்த தெருவிளக்குகள்
நெய்க்காரப்பட்டி பாரதிநகரில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் வீட்டைவிட்டு வெளியே வர பெண்கள் அச்சப்படுகின்றனர். வழிப்பறி பயமும் உள்ளது. எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், நெய்க்காரப்பட்டி.
தண்ணீர் தட்டுப்பாடு
சின்னாளப்பட்டியை அடுத்த அம்பாத்துரை, தொப்பம்பட்டி, காந்திகிராமம், செட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், சின்னாளபட்டி.
பயன்படாத குடிநீர் தொட்டி
பழனி திருநகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதானதால் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், திருநகர்.