திற்பரப்பு அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெப்பத்தை சமாளிக்க அங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-03-27 16:01 GMT
திருவட்டார்:
விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெப்பத்தை சமாளிக்க அங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கோடை வெயில்
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் விடுமுறை நாளில் அருவிகளில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.
அதன்படி, ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். கோதையாற்றில் தண்ணீர் குறைவான அளவில் பாய்வதால், அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. 
ஆனந்த குளியல்
திற்பரப்பு அருவியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அருவியின் எல்லா பகுதியிலும் தண்ணீர் விழாததால் தண்ணீர் விழும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இதமாக குளியல் போட்டனர். அருவி எதிர்புறம் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்ந்தனர். 
அருவியின் மேல் பகுதி அணைக்கட்டில் படகு சவாரி செய்தனர். சுற்றுலா வாகனங்கள் வருகை காரணமாக திற்பரப்பு அருவி வாகன பார்க்கிங் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மாத்தூர் தொட்டி பாலம்
மாத்தூர் தொட்டி பாலத்திலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தொட்டிப் பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்குச் சென்று அங்கிருந்து சுழல் படிக்கட்டு வழியாக கீழிறங்கி தொட் டிப்பாலத்தையும் சுற்றுப்புறத்தையும் ரசித்து மகிழ்ந்தனர். சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து திரும்புவதைக் காண முடிந்தது.
மொத்தத்தில் விடுமுறை நாளான நேற்று குமரி சுற்றுலா தலங்கள் ‘களை’ கட்டி காணப்பட்டது.

மேலும் செய்திகள்