ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-03-27 15:58 GMT
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கேரளாவுக்கு அரிசி கடத்தல்
தமிழகத்தில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.
எனவே கேரளாவின் எல்லையில் உள்ள குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கடத்தல் சம்பவம் தொடர்கிறது. 
2 பேருக்கு சரமாரி வெட்டு
இந்தநிலையில் எஸ்.டி.மங்காடு அருகே பணமுகம் பகுதியை சேர்ந்த அஜின் (வயது 26), குளப்புறம் பொன்னப்பநகர் பாறையடிவிளையை சேர்ந்த ஷிஜி (43) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு குளப்புறம் அன்னிகரை பகுதி சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 
அப்போது கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று அவர்களை நோக்கி வேகமாக வந்து நின்றது. காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய கும்பல் கையில் வெட்டுக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாலையில் நின்ற 2 பேரையும் வெட்ட ஆக்ரோஷமாக பாய்ந்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அஜின், ஷிஜியை அவர்கள் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டினர். இந்த தாக்குதலில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அஜினுக்கு குடல் சரிந்தது. 
தீவிர சிகிச்சை
கும்பல் தாக்கியதால் அஜினும், ஷிஜியும் சத்தம் போட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த கும்பல், பொதுமக்களிடம் சிக்கி விடுவோமோ என பயந்து காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது.
பின்னர் இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் பறிமுதல்
இதற்கிடையே கும்பல் விட்டுச் சென்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் 2 பேரை கும்பல் ஆயுதங்களால் தாக்கிய திடுக்கிடும் தகவல் வெளியானது.
கும்பலுக்கு வலைவீச்சு
அதாவது அஜின், ஷிஜியை வெட்டியவர்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்லும் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் என்பதும், அரிசி கடத்தல் பற்றி அஜினும், ஷிஜியும் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அந்த கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 
இதுதொடர்பாக மெதுகும்மல் மேற்குவிளையை சேர்ந்த ஜோஸ் (22), காப்புக்காடு மாராயபுரம் பாறவிளையை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் சிலர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
மேலும் இந்த கும்பலை பிடிக்க தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்