திண்டுக்கல்லில் பரபரப்பு தர்கா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் தர்கா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-27 15:57 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமது பரிக் பெய்க் (வயது 51). இவர், அங்குள்ள தர்காவில் நிர்வாகியாக உள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் இவருடைய வீட்டின் முன்பு மர்மநபர்கள் திரண்டனர். பின்னர் வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முகமது பரிக் பெய்க் குடும்பத்தினர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தனர். 
அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வீட்டின் சுவரில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் முகமது பரிக் பெய்க் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்கா நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்கா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்