சேந்தமங்கலம் அருகே பரிதாபம் ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலி
சேந்தமங்கலம் அருகே பரிதாபம் ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலி;
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டி வீடு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள சிவநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 32). இவருக்கு கனிஷ்கா (8) என்ற மகளும், மதன் (7) என்ற மகனும் இருந்தனர். இவருடைய அண்ணன் கருப்புசாமி (36). இவருக்கு சஞ்சீவி (11), மதிலேஷ் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கனிஷ்கா பழையபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பும், மதன் அதே பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் பழையபாளையம் பகுதியில் உள்ள அவர்களது பாட்டி செல்லம் (60) வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் கனிஷ்கா, மதன், சஞ்சீவி, மதிலேஷ் ஆகிய 4 பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்ட பிளேட்டை கழுவுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு 4 பேரும் சென்றனர். அப்போது ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தபோது கனிஷ்கா, மதன் ஆகியோர் தவறி ஏரிக்குள் விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சீவி, மதிலேஷ் ஆகியோரும் பதற்றத்தில் ஏரிக்குள் தவறி விழுந்தனர்.
2 பேர் பலி
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பாட்டி செல்லம் உடனடியாக ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சஞ்சீவி, மதிலேஷ் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் கனிஷ்கா, மதன் ஆகியோரை மீட்க முயன்றார். ஆனால் அதற்குள் அக்காள், தம்பி இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களையும் கரைக்கு மீட்டு வந்தார். அப்போது இறந்த கனிஷ்கா, மதன் ஆகியோர் உடல்களை பார்த்து பாட்டி ெசல்லம் கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சேந்தமங்கலம் போலீசார் கனிஷ்கா, மதன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரிக்குள் தவறி விழுந்து அக்காள், தம்பி பலியான சம்பவம் பழையபாளையம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.